“மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் மகுட வாசகத்துக்கு இணங்க தற்பொழுது பல்வேறு சைவ, தமிழ் மற்றும் கல்விப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கும் குருகுலம் அறக்கட்டளையானது கடந்த அரை தசாப்தங்களுக்கு மேலதிகமாக தன்னுடைய உயரிய சேவையினை சைவத்துக்கும் தமிழுக்காகவும் ஆற்றிக் கொண்டிருக்கின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐயங்கேணி என்ற எல்லைக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி மாணிக்கப் பிள்ளையார் அறநெறி பாடசாலையின் கட்டிடத்தை அமைப்பதில் இருந்து இதன் சேவைகள் தொடர ஆரம்பித்தது. இவ் அறநெறி பாடசாலை கட்டிடமானது 2021 ஆம் ஆண்டு பங்குனி உத்திர நன்னாளில் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தன்னுடைய சேவையை விருத்தி செய்து வந்த குருகுலம் அறக்கட்டளையானது அறநெறி பாடசாலைகளையும் சைவ மாணவர்களின் கல்வியையும், அவர்களின் சமூக பின்னணியையும் மேம்படுத்தும் வகையில் தன்னுடைய செயற்பாட்டினை விரிவு படுத்தியது.
ஆரம்பத்தில் எந்த ஒரு அமைப்பாகவும் அமைந்திராத எமது செயற்பாடுகள் அனைத்துக்கும் எந்த ஒரு பின்னணியும் இருக்கவில்லை. இருப்பினும் எமது சேவை மேலும் விருத்தி அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில், குறித்த சேவைகளை மனமுவந்து வழங்கி வந்த திரு. தவராசா சிவதர்ஷன், திரு.சிறிக்காந்தன் ஜனன் ஆகியோரின் எண்ணத்தில் உதித்ததே இந்த குருகுலம் அறக்கட்டளையாகும். இதன் அடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சித்திரை சதயம் நன்னாளான சுவாமி திருநாவுக்கரசரின் குருபூசை தினத்தன்று அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இடையே போட்டிகளை நடாத்தியதுடன், உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணமும் செய்து வைக்கப்பட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் பின்னணியில் எமது சேவைகள் அமைந்துள்ளது.
பின்தங்கிய பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அறநெறி பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் மதிய உணவினை வழங்குதல்.
அறநெறி பாடசாலை மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ஊக்கமளித்து, அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல்.
மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் மாணவர்களிடையே போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவித்தல்.
சைவ சமய விசேட தினங்களில் அறநெறி பாடசாலைகளில் கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துதல்.
பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன சைவ குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
பல்கலைக்கழக கல்வியினை தொடர்வதற்கு பொருளாதாரம் தடையாக காணப்படும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்.
போன்ற பல்வேறு சேவைகளை விரிவுபடுத்தி எமது சைவ மாணவர்களின் கல்வி, சமூக விருத்திக்காக செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறான பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்ற குருகுலம் அறக்கட்டளையினுடைய பிரதான நோக்கமே எமது தமிழ் மாணவர்களின் அறிவு, ஆரோக்கியம், ஒழுக்கம் என்பவற்றை மேம்படுத்தி சைவம் போற்றும் அறநெறி வாழ்வுடன் திகழ வேண்டும் என்பதேயாகும்.